செந்தமிழ்சிற்பிகள்

தி.வை.சதாசிவனார் (1892-1960)

தி.வை.சதாசிவனார் (1892-1960)

அறிமுகம்
தி.வை.சதாசிவனார்(திருப்புறம்பயம் வைத்தியலிங்கம் மகன் சதாசிவம்) (ஆகஸ்ட் 15, 1892 – பிப்ரவரி 2, 1960) தமிழறிஞர், தமிழக வரலாற்றாய்வாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், ஆராய்ச்சி அறிஞர். சோழர்களின் முழுமையான வரலாற்றை முதன் முதலில் எழுதியவர். சோழர், பாண்டிய வரலாற்று நூல்கள் வரலாற்றாய்வாளர்களுக்கு இன்றியமையாததாக உள்ளது. தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமையாக்கியுள்ளது.சதாசிவனார் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் முதன் முதலாகத் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராக ஒன்றரை ஆண்டுகாலம் பணியாற்றினார். கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியிலும் சிறிதுகாலம் பணியாற்றினார். பின்னர் பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகள் (1917 - 1942) தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னத்தூர் அ. நாராயணசாமி,வலம்புரி பாலசுப்பிரமணியம் ஆகியோர் அவருடன் சேர்ந்து பணியாற்றியவர்கள்.

தமிழ் மற்றும் சமுதாயப் பணி
1942-1953, 1953-1960 காலகட்டங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழாராய்ச்சித் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். சைவசமயப் பற்றாளராகத் திகழ்ந்தார்.சதாசிவனார் ஆசிரியப்பணியில் இருந்த போது செந்தமிழ் என்ற மாத இதழில் இவரது கட்டுரைகள் வெளியாகின. 1930-ஆம் ஆண்டு 'முதலாம் குலோத்துங்க சோழன்' என்ற முதல் நூல் வெளியானது. பல இடங்களுக்கும் சென்று சோழர் வரலாற்றை ஆய்வு செய்து 'பிற்கால சோழர் சரித்திரம்' என்னும் பெரு நூலை எழுதினார். இது மூன்று தொகுதிகளாக 1949, 1951 மற்றும் 1961-ஆம் ஆண்டுகளில் வெளியானது. இரு தமிழ் இலக்கிய வரலாறு நூல்களும், பல தல வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். 1914-ஆம் ஆண்டில் செந்தமிழ் இதழில் சதாசிவனார் எழுதிய 'சோழன் கரிகாலன்’ என்பது அவரது முதல் கட்டுரை.சதாசிவனார் தமிழ் வளரச்சிக்கழகம் வெளியிட்ட தமிழ்க் கலைக்களஞ்சியப் பதிப்பாசிரியர் குழுவிலும், தமிழ்ப்பொழில் இதழாசிரியர் குழுவிலும் உறுப்பினராக இருந்து பணியாற்றினார்.

படைப்புகள்
பிற்கால சோழர் சரித்திரம் முதல் பாகம், 1949
பிற்கால சோழர் சரித்திரம் இரண்டாம் பாகம், 1951
பிற்கால சோழர் சரித்திரம் மூன்றாம் பாகம், 1961
சைவசமய சிகமாணிகள் இருவர்
முதல்குலோத்துங்க சோழன், 1930
பாண்டியர் வரலாறு, 1940
திருப்புறம்பயத் தலவரலாறு
செம்பியன் மாதேவித் தலவரலாறு
காவிரிப்பூம்பட்டினம்
திருக்கோவலூர் புராணம்
தொல்காப்பியப் பாயிரவுரை
திருச்செங்கோட்டு திருப்பணிமாலை
திருச்செங்கோட்டுச் சதகம்
அர்த்தநாரீச்சுர சதகம்.

விருதுகள் /சிறப்புகள்
மார்ச் 29, 1956-ல் பேராசிரியர் ஆ.கார்மேகனார் தலைமையில் கூடிய மதுரைத் திருவள்ளுவர் கழகம் 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.ஏப்ரல் 7, 1956-ல் சென்னை எழுத்தாளர் சங்கம் தனது நான்காம் ஆண்டுவிழாவில் கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் அவர்களைக் கொண்டு சதாசிவனாருக்கு கேடயம் வழங்கிச் சிறப்பித்தது.சதாசிவனாரின் படைப்புகள் 2007-ல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.ஜுலை 1959-ல் தி.வை. சதாசிவனார் நோய்வாய்ப்பட்டார். தமது உடல் நோயுற்ற காலத்திலலும் கல்வெட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடும் நினைவாற்றலும் கொண்டவராக காணப்பட்டார். தமது இறுதிக் காலத்திலும் தொடர்ந்து ஆய்வுப் பணி செய்துவந்தார்.ஜனவரி 2, 1960 அன்று உடல்நலக் குறைவின் காரணமாக சதாசிவனார் சிதம்பரம் அண்ணாமலை நகரில் காலமானார்.